கூட்டுறவு விற்பனைச் சங்கத்துக்கு பருத்தி வரத்து சரிவு
By DIN | Published On : 28th February 2019 09:29 AM | Last Updated : 28th February 2019 09:29 AM | அ+அ அ- |

கடந்த வாரம் பருத்தி கொள்முதல் விலை குறைந்ததால், கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் பெரம்பலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் இணைந்து, வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடத்தி வருகின்றனர். இதனால், இடைத்தரகர்களின் தொந்தரவு, எடை மோசடி, பண மோசடி ஆகியவை இல்லாமல் பருத்தி விவசாயிகள் வியாபாரம் செய்து லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் கிருஷ்ணாபுரம், வெங்கனூர், பசும்பலூர், கவர்பனை, அனுக்கூர், பிம்பலூர், வேப்பந்தட்டை உள்பட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 270 விவசாயிகள் 30 ஆயிரம் பருத்தி மூட்டைகளை ஏல முறை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில், ரூ. 58.4 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பருத்தி வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.
143 விவசாயிகள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று, 800 மூட்டை பருத்தி மட்டுமே விற்பனைக்கு கொண்டுவந்தனர். கிலோ ஒன்றுக்கு டி.சி.ஹெச் ரக பருத்தி ரூ. 64 வரையிலும், பிடி ரக பருத்தி ரூ. 53 வரையிலும் ஏல முறையில் விற்பனையானது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.15 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பருத்திக்கான கொள்முதல் விலை குறைந்து காணப்பட்டதாலும், இனி வரும் வாரத்தில் பருத்தி விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பதாலும் ஏலத்துக்கு பருத்தியை கொண்டு வராமல் விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.
இதனால் தான் பருத்தி வரத்து சரிந்துள்ளது. ஆனால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வரத்து அதிகரிக்கும் என்றனர் வேளாண் துறை அலுவலர்கள்.