விதை விற்பனை நிலையங்களில் விவரப் பதாகை வைக்க வேண்டும்
By DIN | Published On : 28th February 2019 09:29 AM | Last Updated : 28th February 2019 09:29 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநரின் அலுவலக முகவரி, தொலைபேசி எண்ணுடன் கூடிய விவரப் பதாகை வைத்து பாரமரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் விதை ஆய்வு துணை இயக்குநர் கண்ணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் விதை விற்பனை செய்வோர் அரசு உரிமம் பெற்ற பிறகே விற்பனை செய்யவேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் விற்பனை செய்தால், அதன் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், விதைப் பைகளில் அட்டை எண், குவியல் எண், பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட 14 விவரங்கள் இருக்கவேண்டும். விவர அட்டையில் ஏதேனும் தவறு இருந்தால், அவற்றை விற்பனை செய்யக்கூடாது. விதை குவியலை பூச்சி மருந்து, உர மூட்டைகள் அருகிலேயே சேமிக்கக் கூடாது,
விதை இருப்பு பதிவேடுகள் மற்றும் விதை சம்பந்தமான ஆவணங்களை முறையாக பாரமரிக்க வேண்டும்.
கடையின் பிரதான இடத்தில் விவசாயிகள் பார்வையில் படும்படி விதை இருப்பு மற்றும் விலை விவர அறிவிப்பு பதாகை இருக்க வேண்டும். இவற்றை கடைபிடிக்காத விதை விற்பனையாளர்கள் மீது, விதைகள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், விவசாயிகள் வாங்கும் விதை சம்பந்தமான குறைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை புகார் தெரிவிக்க விதை ஆய்வு துணை இயக்குநரின் அலுவலக முகவரி, தொலைபேசி எண்ணுடன் கூடிய விவரப் பதாகை கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.