ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வு செய்யப்பட்டு அந்நிலையங்களை மேம்படுத்தும்

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வு செய்யப்பட்டு அந்நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் தரேஸ் அகமது.
பெரம்பலூரில் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அருகே கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் அளித்த பேட்டி:
பெரம்பலூரில் ரூ.10 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை விரிவாக்கக் கட்டடத்தில், கேத் லேப், எம்.ஆர்.ஐ. ஸ்கேன்,  கூடுதல் ரத்த சுத்திகரிப்புப் பிரிவு ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
மாவட்டத்துக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை துரித மருத்துவச் சிகிச்சை மற்றும் பரிசோதனை ஆய்வகம் ஆகிய நவீன வசதிகள் கொண்ட சுகாதார நிலையமாக மேம்படுத்தும் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 தமிழகம் முழுவதும் தாய் திட்டத்தில் 77 விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தவர்கள் துரிதமாக சிகிச்சை பெற்றுள்ளதன் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. விபத்தில் சிக்கிய நபர்கள் 40-லிருந்து 60 நிமிட இடைவெளியில் விபத்து சிகிச்சை பெற வசதியாக, கூடுதல் விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 1,500 மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றுவருகிறது. இவர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டதும், அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் மருத்துவ சேவை மேலும் மேம்படும். பாடாலூரில் அரசு மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 108 ஆம்புலன்ஸ் சேவையை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனம் வழங்கும் சேவைக் குறைபாடு மற்றும் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தரேஸ் அஹமது.
தொடர்ந்து, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற தரேஸ் அகமது, அங்கு சூப்பர்- 30 திட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்று வரும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார். 
இந்நிகழ்ச்சியின்போது, மருத்துவர் அரவிந்தன், சூப்பர் 30 ஒருங்கிணைப்பாளர் ரா. பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com