உயிரிழந்த முகநூல் நண்பர் குடும்பத்துக்கு மு.க. ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி
By DIN | Published On : 24th January 2019 11:25 AM | Last Updated : 24th January 2019 11:25 AM | அ+அ அ- |

உடல்நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்த திமுக அனுதாபியும், முகநூல் நண்பருமான பாடாலூர் விஜய் உருவப்படத்தை புதன்கிழமை திறந்து வைத்து, அவரது குடும்பத்துக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரைச் சேர்ந்த தங்கராசு- மணிமேகலை தம்பதியினர் மகன் விஜய் (24). இவர் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி செயல்படாமல் போனதால், மாற்றுத் திறனாளியானார். இதனால் 9 ஆம் வகுப்புக்கு மேல் விஜய் படிப்பைத் தொடர முடியவில்லை. பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும், உடல் நலக்குறைபாடு சரியாகவில்லை.
இந்நிலையில், விஜயின் சகோதரி ஒருவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்று மு.க. ஸ்டாலினிடம் பரிசு வாங்கியபோது, தனது சகோதரரின் நிலையைத் தெரிவித்து அவரது சிகிச்சைக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, விஜயை சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்தித்துப் பேசி, மருத்துவச் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்டாலின் செய்தார்.
பின்னர், முக நூலில் இணைந்த விஜய் திமுகவுக்கு ஆதரவான கருத்துகளைத் தீவிரமாக பரப்பி பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இதன்மூலம் மு.க. ஸ்டாலினுக்கு விஜய் நெருக்கமானார்., திருச்சி செல்லும் வழியில், ஸ்டாலின் இவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து செல்வாராம்.
இந்நிலையில், கடந்த ஜன.19 ஆம் தேதி உடல் நலக்குறைவால் விஜய் காலமானார். இதுகுறித்த தகவலை ஸ்டாலின் கவனத்துக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் விஜய் குடும்பத்துக்கு நிதி உதவியளிக்க முடிவு செய்யப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சிக்கு வந்திருந்த ஸ்டாலின், பாடாலூரில் உள்ள விஜயின் இல்லத்துக்கு புதன்கிழமை நேரில் சென்று, அவரது உருவப்படத்தை திறந்து வைத்து, அவரது பெற்றோரிடம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை அளித்து ஆறுதல் கூறினார்.
திமுக கொள்கை பரப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா, முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு,
க. பொன்முடி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலர் அப்துல்லா, மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர்.