இலவச வீட்டுமனைப் பட்டா கோரி  வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி அரும்பாவூர் பேரூராட்சியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி அரும்பாவூர் பேரூராட்சியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள், வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
      பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு, வீடுகளில் போதிய இடவசதி இல்லாததால் இரவு நேரங்களில் தெருவில் படுத்து உறங்க வேண்டிய நிலையில் உள்ளனர்.  இதனால் அவதியுற்ற அப்பகுதி மக்கள் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். 
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள், வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடற்ற ஏழை பொதுமக்களுக்கு இலவச வீட்டுனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, கோரிக்கை அடங்கிய மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்துவிட்டு அனைவரும் கலைந்துசென்றனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஜெயராமன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com