14 ஏரிகளில் ரூ. 3.45 கோடியில் குடிமராமத்து பணிகள்
By DIN | Published On : 05th July 2019 09:07 AM | Last Updated : 05th July 2019 09:07 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 ஏரிகளில் குடி மராமத்துப் பணிகள் மேற்கொள்ள ரூ. 3.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பொதுப்பணி துறை, நீர்வள ஆதாரத் துறை சார்பில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக பாசனதாரர்கள் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளில் 14 ஏரிகளை நிகழாண்டு ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில் அந்தந்த ஏரியில் பாசனம் பெறும் பாசனதாரர்களின் குழு அமைத்து, அவர்கள் மூலம் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
பருவமழை காலத்தைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஏரிகளின் கரைகள் பலப்படுத்துதல், வரத்து வாய்க்கால் சீரமைத்தல், அணைக்கட்டு பகுதியில் ஷட்டர்கள் பொருத்துதல் மற்றும் பாசன வாய்க்கால் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின் சுமார் 2,700 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்படுவதுடன், 14 ஏரிகளின் மூலமாக 260 மில்லியன் கன அடி நீரானது தேக்கப்பட்டு குடிநீர் பற்றாக்குறையைப் போக்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
கூட்டத்தில், பொதுப்பணி துறை, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் தட்சணாமூர்த்தி மற்றும் பிரிவு அலுவலக பொறியாளர்கள், பாசனதாரர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.