படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 08th July 2019 07:54 AM | Last Updated : 08th July 2019 07:54 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10 வகுப்பு தேர்ச்சி, அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடர்ந்து புதுப்பித்து 30.6.2019-இல் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் எனில் 30.6.2019-இல் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே, விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக. 30 ஆம் தேதி வரையில் நேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அணுகி சமர்ப்பிக்கலாம்.