ஓய்வுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 08th July 2019 07:54 AM | Last Updated : 08th July 2019 07:54 AM | அ+அ அ- |

ஓய்வுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, மாத ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாயத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின், மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பெருமாள் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கதிர்வேல், மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், பெரம்பலூர் மாவட்ட செயலர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஓய்வுபெற்ற கட்டுமான நல வாரிய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 1,000 என்பதை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். உறுப்பினர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். தலைவர் பதவிக்கு தகுதியான நபர்களை விரைந்து நியமனம் செய்ய வேண்டும். பதிவு செய்த அனைத்து அமைப்புசார தொழிலாளர்களும், தேசிய அளவிலான இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் மேக்கே தாட்டுவில் அணை கட்டும் முயற்சியை அம்மாநில அரசு கைவிட வேண்டும். கர்நாடக மாநில அரசு, காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.