தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலர்களை பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் பணி மாற்றம்

கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலர்களை பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் பணி மாற்றம் செய்வதை கண்டித்து, பெரம்பலூரில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தையும், அரியலூரில் பேரணியையும் திங்கள்கிழமை நடத்தினர்.
தமிழகத்திலுள்ள 4,600 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் செயலர்களை பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் மாற்றம் செய்ய கூட்டுறவுத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இதனால், சங்கங்களுக்கு  ஏற்படும் இழப்புகளையும், பணியாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் நிவர்த்தி செய்யவதோடு, சங்க பணியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற  வேண்டும்.
சங்க செயலர்களை பணியிடை மாற்றம் செய்வதை நிறுத்தி வைத்து, அரசாணை வழங்க தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் ஆட்சியர் மூலம் மனு அனுப்ப இச்சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி இக்கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப்ப பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் வழங்கினர். 
இப்போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள 53 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 291 நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் கூட்டுறவு வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டதோடு, நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெறமுடியால் குடும்ப அட்டைதாரர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
அரியலூரில் :  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் காமராஜர் திடலில் இருந்து அண்ணாசிலை வரை முழக்கமிட்டவாறு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை  பேரணியாகச் சென்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
பேரணிக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் புலிகேசி, பொருளாளர் பழனிவேல்  முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் சக்திவேல், அமுதா, இணைச் செயலாளர்கள் பிரபா, அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com