விலையில்லா மடிக்கணினி கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்
By DIN | Published On : 13th July 2019 07:43 AM | Last Updated : 13th July 2019 07:43 AM | அ+அ அ- |

விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி, எளம்பலூர் மற்றும் பாடலூரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் இதுவரை வழங்கப்படவில்லை.
ஆனால், நிகழாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிட கோரி திருச்சி- சென்னை நெடுஞ்சாலையிலும், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெரம்பலூர்- எளம்பலூர் சாலையிலும் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் அங்குசென்று, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவ, மாணவிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
இதேபோல, அன்னமங்கலம் அரசு உதவிபெறும் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.