சுடச்சுட

  


  ஆண்டுதோறும் சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதாலும், வறட்சியாலும் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எலுமிச்சை சாகுபடியை அதிகரிக்க குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 
  வேலையாள்கள், மின்சாரப் பிரச்னைகளைக் கடந்து விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் அளிக்கும் பயிர்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது எலுமிச்சை சாகுபடி. இப் பயிரானது சாகுபடி செய்யப்பட்ட 3-ஆவது ஆண்டு முதல் காய்க்கத் தொடங்கும். 
  அந்த ஆண்டில் சுமார் 100 முதல் 200 காய்களும், 5-ஆவது ஆண்டு முதல் மரத்துக்கு 800 முதல் 1,500 காய்கள் வரை கிடைக்கும். 
  ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே எலுமிச்சை பழங்கள் கிடைக்காது. சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் வரை எலுமிச்சை பழங்களை அறுவடை செய்யலாம். 
  பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் கொண்ட எலுமிச்சை பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், மேட்டூர், பெரகம்பி, செட்டிக்குளம், நாரணமங்கலம், காரை, புதுக்குறிச்சி உள்பட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. 
  கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழையின்மை, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எலுமிச்சை சாகுபடியின் பரப்பளவு குறைந்து வருகிறது. எலுமிச்சை பயிரிட்டுள்ள வயலுக்கு 7- 10 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
  ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாகவும், மும்முனை மின்சாரம் கிடைக்காததாலும், தண்ணீர் பாய்ச்சுவதில் நீடித்த சிக்கல்களாலும் எலுமிச்சை மகசூல் குறைந்து வருகிறது. 
  குறிப்பாக, நிகழாண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பெரும்பாலான இடங்களில் எலுமிச்சை மரங்கள் காய்ந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், எலுமிச்சை சாகுபடியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 
  தமிழகத்தில் எலுமிச்சை சாகுபடியின் பரப்பளவு குறைந்ததோடு, தற்போது நிலவும் கடும் வறட்சியால் போதிய மகசூல் கிடைக்காததால் எலுமிச்சை பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 
  கடந்த 5 ஆண்டுகளாக மழை இல்லாததால் விளைச்சல் குறைந்து வருகிறது. வரத்து குறைந்ததால் விலை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. சந்தையில் எலுமிச்சம் பழம் கிலோ ரூ. 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது என எலுமிச்சை விவசாயிகள்,வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 
  இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட இளைஞரணிச் செயலர் வீ. நீலகண்டன் கூறியது:
  கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. கடுமையான வெப்பம் நிலவுவதாலும், தண்ணீர் இல்லாததாலும் பெரும்பாலான எலுமிச்சை செடிகள் கருகத் தொடங்கியுள்ளன. 
  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சாகுபடி செய்த பழங்கள் 50 பைசா முதல் ரூ. 2 வரை விற்பனையானது. இடைத்தரகர்களும், வியாபாரிகளும் லாபம் பெற்றுவந்த நிலையில், பழங்களை பொறுக்குவது, ஏற்றுமதி செலவு என உற்பத்தி செலவுக்கூட கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதனால், எலுமிச்சை செடிகளை அழித்துவிட்டு மாற்றுப் பயிர்களை பயிரிடத் தொடங்கியதால், சாகுபடி பரப்பளவும் குறைந்துவிட்டது. 
  சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த வேண்டுமானால், தமிழக அரசு கட்டுப்படியான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார் அவர்.         

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai