பெரம்பலூர் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சா மூட்டைகள் கடத்திவந்த இருவரை, மதுரை தனிப்படை

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சா மூட்டைகள் கடத்திவந்த இருவரை, மதுரை தனிப்படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்துக்கு, காரில் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி, உதவி ஆய்வாளர் கார்த்திக்செல்வன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படையினர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை வழிமறிக்க முயன்றபோது போலீஸார் மீது மோதிவிட்டு காரில் வந்த நபர்கள் தப்ப முயன்றதோடு, காரில் இருந்த நபர் போலீஸாரை தாக்குவதற்காக ஆயுதங்களை எடுக்க முயற்சித்ததாகத் தெரிகிறது. இதையறிந்த போலீஸார் துப்பாக்கியால் சுட்டு காரை சுற்றிவளைத்து நிறுத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
பின்னர், காரில் இருந்த இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்து, காரை சோதனையிட்டதில் அதில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் அருகே உள்ள மங்கலமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மதுரை காமராஜபுரம் முத்து மகன் படைமுனியசாமி (29), ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள எருமைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிறைமீட்டான் மகன் வழிவிடு முருகன் (19) என்பதும், ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதியிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்திவந்ததும் தெரியவந்தது. 
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி சரக காவல்  துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் பார்வையிட்டுச் சென்றனர்.  இதுதொடர்பாக மங்கலமேடு போலீஸார் வழக்கு பதிந்து, படைமுனியசாமி, வழிவிடு முருகன் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கொண்ட கஞ்சா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். 
இதுதொடர்பாக, திருச்சி சரக காவல் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியது:  கைதான இருவர் மீதும் மதுரை மற்றும் ராமநாதபுரம்  மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது கஞ்சா கடத்தல் தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது என்றார் அவர்.             

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com