சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
By DIN | Published On : 15th July 2019 08:54 AM | Last Updated : 15th July 2019 08:54 AM | அ+அ அ- |

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென, அச் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட 4-ஆவது பேரவைக் கூட்டம், துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பொன். ஆனந்தராசு தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சின்னதுரை தொடக்க உரையாற்றினார்.
மாவட்டச் செயலர் கொளஞ்சி வாசுதேவன், சங்க செயல்பாடுகள், பொருளாளர் வெங்கடாசலம் நிதிநிலை அறிக்கை வாசித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநில துணைத்தலைவர் அமுதா, சத்துணவு ஊழியர்கள் நடத்திய போராட்டங்கள், சத்துணவு ஊழியர்களின் அன்றாட பணிசுமைகள் குறித்துப் பேசினார்.
கூட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சட்டரீதியான ஓய்வூதியம், சமையலர் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
சத்துணவு மையங்களில் ஒரு மாணவருக்கு உணவூட்டும் செலவினத்தை ரூ. 5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் குமரி ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் இ. மரியதாஸ் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தையமுத்து வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா நன்றி கூறினார்.