மழைநீர் சேகரிப்பு இருந்தால் மட்டுமே வீடு கட்ட அனுமதி

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு  அமைத்திருந்தால் மட்டுமே, புதிய வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டுவதற்கு


பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு  அமைத்திருந்தால் மட்டுமே, புதிய வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் நகராட்சி ஆணையர் (பொ) ராதா. 
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
நகராட்சிக்குள்பட்ட பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய  பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றை புனரமைத்து மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
பருவமழை காலங்கள் மற்றும் வெப்பச் சலனங்களினால் பொழியும் மழை நீரை வீணடிக்காமல், உரிய முறையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி சேமித்திடும் பட்சத்தில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யலாம். 
ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டடங்களில் புனரமைத்து, பெறப்படும் ஒவ்வொரு துளி மழைநீரையும் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட வேண்டும். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெறப்படும் மழைநீரை அனைவரும் சேமிக்க வேண்டும். 
மேலும், புதிய வீடுகள் கட்டுவதற்கான அனுமதி பெறுவதற்கும், சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு பெறுதலுக்கு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பு இருந்தால் மட்டுமே நகராட்சி மூலம் அனுமதி, இணைப்பு, வரி விதிக்கப்படும்.  
எனவே, நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழைநீரை சேகரிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com