மாவட்ட ஆட்சியரகத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அடுத்தடுத்து 2 பேர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அடுத்தடுத்து 2 பேர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக்  கூட்ட அரங்கில்  மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.   அப்போது, மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையறிந்த, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த முதியவரை மீட்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் பெரம்பலூர் மாவட்டம்,  லப்பைக்குடிகாட்டைச் சேர்ந்த சதாசிவம் (62) என்பது தெரிய வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் கமால் பாட்ஷா (50) என்பவரிடம், தனது நிலத்தை  ரூ. 80 ஆயிரத்துக்கு கடனுக்காக அடமானம்  வைத்திருந்ததும், வாங்கிய கடனுக்காக  அடமானம் வைத்த நிலத்தை கடன் அளித்தவர் அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டதும், இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபோல் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரைச் சேர்ந்த தமிழரசி(45) தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். 
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அரும்பாவூர் ஏரிக்கரை பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு சார்பில் தனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அபகரித்துக் கொண்டதாகவும், அந்த வீட்டுமனையை 
மீட்டுத்தரக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர், அரும்பாவூர் போலீஸார், வேப்பந்தட்டை வட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனவேதனையடைந்த தமிழரசி தீக்குளிக்க முயற்சித்ததாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து  சதாசிவம், தமிழரசி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com