Enable Javscript for better performance
சொந்த செலவில் குளங்களைத் தூர்வாரும் இளைஞர்கள்- Dinamani

சுடச்சுட

    

    அழிந்து வரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாகவும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பனங்கூர் கிராமத்தில் இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் குளங்களத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    குன்னம் வட்டம், பனங்கூர் அய்யனார் கோயில் அருகேயுள்ள அய்யனார் குளத்திற்கு காடுகளிலிருந்து வரத்துவாய்க்கால்கள் மூலமாக வந்து சேரும் மழை நீரானது, குளம் நிரம்பியவுடன் கிராமத்தில் உள்ள பெரிய குட்டைக்குச் சென்று, பின்னர் புறங்குட்டை என்றழைக்கப்படும் குளத்திற்கு செல்லும். பிறகு, அங்கிருந்து மருதையாற்றிற்கு உபரி நீர் செல்லும்படியான கட்டமைப்பு உள்ளது. புறங்குட்டைக்கு பனங்கூர் - மருவத்தூர் வனப்பகுதிகளிலிருந்தும் மழை நீர் வரும்படியாக வரத்துவாய்க்கால்கள் உள்ளன. ஆனால், அண்மைக்காலமாக குளங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, புறங்குட்டைக்கு வரும் வரத்துவாய்க்கால் தவிர அனைத்தும் தூர்ந்துபோனது.
    இவற்றைச் சீரமைக்க முடிவெடுத்த கிராம இளைஞர்கள் "பனங்கூர் பசுமைப் பயணம்" என்னும் குழுவை ஆரம்பித்து, உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்கள் மூலமாக ரூ. 1 லட்சம் நிதி திரட்டினர். இந் நிதியைக்கொண்டு கடந்த 20 ஆம் தேதி முதல் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், குளங்களை ஆழப்படுத்துதல், பாலங்கள் அமைத்து நீர்வரத்துகளையும் சீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூர்வாரும்போது, பெரியகுட்டை என்னும் குளத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரை பயன்பாட்டில் இருந்த உறை கிணற்றையும் கண்டறிந்தனர். தொடர்ந்து, குடிநீர் தேவைக்காகப் பயன்பட்டு வந்த இந்தக் கிணற்றையும் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    மேலும், குளங்களைச் சீரமைக்கும் செயல்கள் நிறைவடைந்த பிறகு ஆங்காங்கே பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் திட்டத்திலும் உள்ளனர். தங்களால் நிதி திரட்டி இப்பணிகளல் ஈடுபட்டுவரும் இளைஞர்களுக்கு உதவியாக, அய்யனார் குளத்திற்கு வரும் வரத்து வாய்க்காலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai