முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
இலவச வீட்டுமனை பட்டா கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 09:59 AM | Last Updated : 30th July 2019 09:59 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டக்குடி கிராம பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான வீடுகள் இல்லையாம். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் அளித்த மனுவில்
குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வீடு மற்றும் வீட்டுமனைப் பட்டா இல்லாமல் தவித்து வருகிறோம். இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு செப். 19 ஆம் தேதி பெரம்பலூருக்கு வருகைபுரிந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கோரிக்கை மனு அளித்தோம்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆளுநர், இடம் தேர்வு செய்து நிலம் கையகப்படுத்தி பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விரைவாக நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும்.