பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 302 மனுக்கள் அளிப்பு: நிவாரண நிதி வழங்கல்
By DIN | Published On : 30th July 2019 10:00 AM | Last Updated : 30th July 2019 10:00 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 302 மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவக்குமார் மகன் அபிஷேக் (9), கடந்த 05.01.2018-இல் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டதால், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் தொகைக்கான காசோலை வழங்கினார் ஆட்சியர்.
முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 302 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டத்தில், இலவசப் பேருந்து பயண அட்டை, வங்கிக்கடன், செயற்கை கால் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 33 மனுக்கள் அளிக்கப்பட்டது. பின்னர், 10 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 3 பேருக்கு திருமண உதவித்தொகையாக ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் மனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரியலூரில் 593 மனுக்கள் அளிப்பு: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 593 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்,அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நான்குவழிச்சாலை அமைக்கக் கோரிக்கை: தத்தனூர் கிராம மக்கள் அளித்த மனுவில், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், நான்கு வழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் இருந்து கீழப்பழுவூர் அடுத்த கருப்பூர் வரை நான்கு வழிச்சாலையாகவும், கருப்பூரில் இருந்து ஜயங்கொண்டம் குறுக்குச் சாலை வரை இரு வழிச்சாலையாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எங்களிடம் நான்கு வழிச்சாலை பணிக்கென நிலத்தை கையகப்படுத்துவிட்டு, தற்போது கருப்பூரில் இருந்து ஜயங்கொண்டம் குறுக்குச் சாலை வரை(40 கிலோ மீட்டர்)இரு வழிச்சாலையாக அமைப்பது வேதனைக்குரியது. எனவே நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய மேற்கண்ட சாலை வரை சாலையின் நடுவில் தடுப்புச் சுவருடன் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.