மாவட்ட ஆட்சியரகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு
By DIN | Published On : 18th June 2019 09:01 AM | Last Updated : 18th June 2019 09:01 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு அலுவலரின் மோட்டார் சைக்கிள் திங்கள்கிழமை திருடு போயுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருபவர் சதீஸ் குமார். திங்கள்கிழமை காலை பணிக்கு வந்த சதீஸ்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திச்சென்றார். சுமார் 15 நிமிடம் கழித்து அலுவலகப் பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, அங்கே நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் இல்லாதது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால், ஆட்சியரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் புகார் அளித்தார். பொதுமக்கள் குறைதீர் கூட்டம் என்பதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். இருப்பினும், பாதுகாப்பு நிறைந்த பகுதியிலேயே அரசு ஊழியரது மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.