அம்பட்டன் ஏரியை தூர்வாரும் கிராமமக்கள்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பரவாய் கிராம மக்கள் ஒன்றிணைந்து, தங்களது  செலவில் அப்பகுதியில்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பரவாய் கிராம மக்கள் ஒன்றிணைந்து, தங்களது  செலவில் அப்பகுதியில் உள்ள அம்பட்டன் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தின் தென் கிழக்கு பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அம்பட்டன் ஏரிக்கு சிற்றோடை வழியாக மழைநீர் வந்து சேரும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியினரின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. கோடை காலத்தில் ஏரியில் நீர் வற்றியவுடன், ஏரியின் மையப் பகுதியில் இருந்த பெரிய கிணற்றில் அப்பகுதியினர் நீர் எடுத்துக்கொள்வார்களாம்.  தற்போது ஏரிக்குள் பெரிய கிணறு இருந்ததற்கான அடையாளமாக கட்டுக்கற்கள் மட்டுமே காணப்படுகின்றன. 
பொதுக்குழாய் மூலம் குடிநீர் விநியோகம், வீட்டுக்கு வீடு ஆழ்துளை குழாய்கள் ஆகியவற்றின் விளைவாக கடந்த பல ஆண்டுகளாக அம்பட்டன் ஏரி கண்டுகொள்ளப்படாததால் தூர்ந்து போனது. தற்போது ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து முள் காடாக மாறியுள்ளது.  
 பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வறட்சியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து ஆழ்துளை குழாய் கிணறுகளும் வறண்டன. தண்ணீருக்காக மனிதர்களும், கால்நடைகளும் நீண்ட தொலைவு அலையத் தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஏரியை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி, பொதுமக்கள், இளைஞர்கள் சேர்ந்து 
சீரமைக்கத் தேவையான நிதி திரட்டினர். கடந்த 3 நாள்களாக இயந்திரங்களின் உதவியுடன் கருவேல மரங்கள், முள் புதர்கள் ஆகியவை அகற்றப்பட்டுவிட்டன. 
மேலும், ஏரியை சமப்படுத்தி, அதன் கரைகளைப் பலப்படுத்தி, அவற்றில் மரக்கன்றுகள் நட வேண்டும். 
ஏரிக்குத் தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால், உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி சம்பந்தப்பட்ட  அரசு அலுவலர்கள் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com