செயல்படாத ஆதார் சேவை மையங்கள்: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 28th June 2019 08:57 AM | Last Updated : 28th June 2019 08:57 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதார் சேவை மையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை, சர்வர் பிரச்னைகளால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் அரசு கேபிள் டி.வி நிறுவனம் மற்றும் எல்காட் நிறுவனக் கட்டுப்பாட்டின் கீழ் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களுக்கு புதிய அட்டை விண்ணப்பித்தல், பிழை திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இவற்றில் வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் வட்டாட்சியரக சேவை மையங்களும், இ- சேவை மையங்களும் கடந்த சில மாதங்களாகவே முறையாகச் செயல்படவில்லை.
இதனால், மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியரகம் வந்து செல்கிறார்கள். நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையம் மூடப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு மேலாகியும், தொடங்கப்பட்டபோது வைக்கப்பட்ட தகவல் பதாகை மட்டும் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், சிலர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு அதிகளவில் பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் அவ்வப்போது புகைப்படம் எடுக்கும் பணி, பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அங்குள்ள பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிழை திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு ரூ. 25-க்கு பதிலாக ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆட்சியரகத்தை தவிர, இதர ஆதார் சேவை மையங்களில் சர்வர் பிரச்னை மற்றும் பணியாளர்கள் இல்லாததால் கடந்த ஒரு வாரமாக பூட்டியே கிடக்கிறது. இதனால், இங்கு வரும் பொதுமக்கள் நாள்தோறும் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதையறிந்த தனியார் மையங்கள், பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு ஆதார் பணிகளை செய்கின்றனர்.
மாவட்டத்தில், ஆட்சியரகத்தில் உள்ள ஆதார் மையம் மட்டுமே செயல்படுகிறது. இங்கு, அதிகளவில் பொதுமக்கள் வருவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்களைத் திறந்து மக்களின் சேவைக்காக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.