அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd March 2019 08:41 AM | Last Updated : 02nd March 2019 08:41 AM | அ+அ அ- |

பெரம்பலூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யூ.சி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாவட்ட கெளரவத் தலைவர் என்.எம். ரெங்கராஜ் தலைமை வகித்தார். மத்திய சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் என். ஜெயராமன், கிளைத் தலைவர் கோவிந்தராஜ், கிளை செயலர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மாநில துணைப் பொதுச்செயலர் எம். மணி, மத்திய சங்க பொதுச் செயலர் என். சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்துக் கழக பணி மனைகளில் சுகாதாரமான கழிப்பிட வசதி, தூய்மையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். பணி முடிந்த நடத்துநர்கள் வசூல் தொகையை செலுத்தக் காத்திருக்க வைக்கும் போக்கைக் கைவிட வேண்டும். கையூட்டு கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். கிளை துணைச் செயலர் சம்பத் நன்றி கூறினார்.