பெரம்பலூருக்கு ரயில் சேவை ஏற்படுத்தித்தர வலியுறுத்தல்
By DIN | Published On : 04th March 2019 08:59 AM | Last Updated : 04th March 2019 08:59 AM | அ+அ அ- |

பெரம்பலூருக்கு ரயில் பாதை வசதி ஏற்படுத்த வேண்டுமென, லட்சிய ஜனநாயகக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், லட்சிய ஜனநாயக கட்சியின் மக்களவை தேர்தல் தொடர்பான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெரம்பலூர் மாவட்டச் செயலர் செளந்தராஜன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் கார்த்திகேயன், ஜானகிராமன், ரவிசங்கர், பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக் கட்சியின் நிறுவனத் தலைவர் நெல்லை ஜீவா, மக்களவை தேர்தலில் தொண்டர்களின் செயல்பாடுகள், மக்களவை தேர்தலுக்காக இதர கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று பெரம்பலூருக்கு ரயில்பாதை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப். 16 ஆம் தேதி காணாமல் போன முகிலனைக் கண்டறிய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்துவதோடு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்சியின் மாநில நிர்வாகிகள் இருதயராஜ், ரவிக்குமார், சம்பத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரச் செயலர் நவாஷ் வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் பச்சமுத்து நன்றி கூறினார்.