பாஜக தொண்டர்கள் உத்வேகத்துடன் உழைக்க வேண்டும்: இல. கணேசன்

40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உத்வேகத்துடன் உழைக்க

40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உத்வேகத்துடன் உழைக்க வேண்டும் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், அக் கட்சியின் மூத்த தலைவருமான இல. கணேசன்.
பெரம்பலூரில், மத்திய மண்டலத்துக்குள்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த திருச்சி பெருமண்டல பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் 5 தொகுதியில் பி.ஜே.பி போட்டியிடுகிறது. ஆனால், 40 தொகுதியிலும் நரேந்திர மோடி போட்டியிடுவதாக நினைத்து பாடுபட வேண்டும். நரேந்திர மோடி வந்ததால் தான், உலகளவில் இந்திய நாடு உயர்ந்து நிற்கிறது. இன்னமும் உயரவேண்டும். உலக அளவில் 6 இடத்தில் உள்ள இந்திய பொருளாதாரம் 3 இடத்துக்கு வரவேண்டும். பாரத நாடு முக்கியம், நாடு முன்னேற வேண்டும் என்றால் அது நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். கொள்கைக்காக எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் உள்ள திமுக வெறும் திராவிட முன்னேற்ற கழகம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு பின்னால் உள்ளது. இந்தியாவில் 60 ஆண்டுகளில் அதிகமாக கொள்ளையடித்தது காங்கிரஸ் கட்சியினர். இக் கட்சியினரால் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி திமுக. அவர்களை ஆதரிப்பதால் தேச விரோத சக்திக்கு திமுக துணை போகிறது. அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் அதிமுக தொண்டர்களை விட அதிகமாகவும், நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உத்வேகத்துடன் உழைக்க வேண்டும். அப்போது தான் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். ஏனெனில், மீண்டும் பிரதமாக நரேந்திர மோடி வரவேண்டும். இந்தியாவில், இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமாவது உறுதி என்றார் இல. கணேசன். 
கூட்டத்துக்கு, கோட்ட பொறுப்பாளர் எம். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன், கோட்ட இணை பொறுப்பாளர்கள் இல. கண்ணன், சிவசாமி, பொறுப்பாளர்கள் இளங்குமார் சம்பத், அய்யாரப்பன், பெரியசாமி மற்றும் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். 
பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் வரவேற்றார். திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் மனோகர் ராஜன் நன்றி கூறினார்.

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்

கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் மேலும் கூறியது: 
தமிழகத்தில் பா.ஜ.க போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இரண்டொரு நாளில் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு முறைப்படி அறிவிக்கும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு கவலைக்குரிய பிரச்னை தான் என்றாலும், பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்து, அத்தொகுதியில் மக்களிடம் வெற்றி வாய்ப்பைப் பெறுவோம். தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 தொகுதியிலும் அமோகமாக வெற்றி பெறும்.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகப்படியான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இல. கணேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com