தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 12 ஆம் தேதி மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, 13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தண்டாயுதபாணிக்கு பூஜைகள் நடைபெற்றது. 
தொடர்ந்து, நாள்தோறும் காலை 10 மணிக்கு மலையில் உள்ள மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரதங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 
7 ஆம் திருவிழாவான மார்ச் 19 ஆம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், 20 ஆம் தேதி சிவன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது. 
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் வியாழக்கிழமை மாலை 4.40 மணிக்கு தொடங்கி, பிரதான வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்படும் திருத்தேர் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) மாலை நிலைக்கு வந்தடைகிறது. திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி தந்தார். 
விழாவில், பெரம்பலூர், பாடாலூர், சத்திரமனை, துறையூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு புதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்னர். விழாவை முன்னிட்டு, பெரம்பலூர், துறையூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ம. யுவராஜு, தக்கார் கே. பாரதிராஜா தலைமையிலான கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
பாலமுருகன் கோயில் தேரோட்டம்: பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 39 வது ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  
பெரம்பலூர் பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12 ஆம் தேதி இரவு அனுக்கை, விக்னேஸ்வரா பூஜை, வாஸ்து சாந்தி, மண் எடுத்தல், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் காலை 8 மணிக்கு மூலவருக்கு அபிசேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், 19 ஆம் தேதி தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை பாலமுருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  தேரோட்டத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. அர்ச்சகர் ரமேஷ் அபிஷேகம் ஆராதனையை நடத்தினார். பின்னர் வள்ளி, தெய்வானையுடன் பாலமுருகன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சப்பர திருத்தேரோட்டம் நடைபெற்றது. நகரின் பிரான வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.  வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு மஞ்சள் நீர் விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. தொடர்ந்து 28 ஆம் தேதி பஞ்சாட்சர திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com