வெயிலின்தாக்கம் அதிகரிப்பு: தர்ப்பூசணி, முலாம் பழங்கள் விற்பனை மும்முரம்

கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், தர்ப்பூசணி, முலாம் உள்ளிட்ட பழங்கள் மற்றும் இளநீர்

கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில், தர்ப்பூசணி, முலாம் உள்ளிட்ட பழங்கள் மற்றும் இளநீர் விற்பனை பெரம்பலூர் பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வழக்கமாக மார்ச் மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் தொடங்கி ஜூன் மாதம் வரை நிலவும். ஆனால், நிகழாண்டில் பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் காணப்பட்டது. நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
கோடை வெயிலின் தாக்கத்தை குளிர்விக்க பெரும்பாலும் பயன்படுவது தர்ப்பூசணி பழம்தான்.  இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, உடலை சீரான வெப்பநிலையில் வைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி சத்தும், சர்க்கரையும் நிறைந்திருப்பதால் உடல் சோர்வை போக்கவும் தர்ப்பூசணி பெரிதும் உதவுகிறது. 
தீவிரமடைந்த வியாபாரம்:  
வழக்கம்போல மார்ச் தொடக்கத்தில் தான் இப்பழங்களின் வரத்து அதிகரிக்கும். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதான சாலைகளில், வழக்கத்தைவிட அதிகளவில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 
திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் தர்பூசணிப் பழங்கள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டுள்ளன. பெரம்பலூர் நான்குச் சாலை சந்திப்பில் இருந்து ஆத்தூர், துறையூர் சாலைகள் உள்பட பிரதான இடங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.சில்லறை விலையில் பெரிய துண்டு தர்ப்பூசணி ரூ. 10-க்கும், கிலோ ரூ.15 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 
இதுகுறித்து பாலக்கரை பகுதியில்  கடை வைத்துள்ள தர்ப்பூசணி வியாபாரி ஒருவர் கூறியது:  கடந்த ஆண்டு இறுதியில் போதிய மழை பெய்ததால் தர்ப்பூசணிப் பழங்களின் விளைச்சல் அதிகரித்தது. இதனால், கடந்த ஆண்டைவிட அதிகளவில் வரத்து காணப்படுகிறது. இதனால், தள்ளுவண்டி வியாபாரிகள் கூட சாலையோரங்களில் விற்பனை செய்யத்தொடங்கி உள்ளனர். 
பழங்களை அறுவடை செய்யும் ஆள்களுக்கும் பற்றாக்குறையாக உள்ளது. இதைத் தவிர, லாரிகளின் வாடகையும் அதிகமாகி உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தேவை அதிககரிப்பதோடு, வரத்தும் குறைந்துவிடும். இதனால் விலையை அதிகமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.
முலாம் பழங்கள்: தர்ப்பூசணியைப் போன்று,  முலாம் பழங்களையும் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். பொதுவாக இப்பழங்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த காலத்தில் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்ட கிர்னி பழங்கள் இப்போது குறைந்தே காணப்படுகின்றன. இப்பழங்கள் தற்போது ஒருசில இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கும் வரத்துக் குறைவே காரணம் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இளநீர் விலையும் அதிகரிப்பு
எப்போதும் இல்லாத வகையில் தற்போது இளநீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் அதன் விலையும் அதிகமாகியுள்ளது. லாரி வாடகை உயர்வு காரணமாக பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து இளநீர்களை கொண்டு வரும் வியாபாரிகள் விலையை ஏற்றியுள்ளனர்.உழவர் சந்தையில் இளநீர் ரூ.40-க்கும், சாலையோரங்களில்ரூ. 30 முதல் 40 வரையிலும் விற்கப்படுகின்றன என்கின்றனர் வியாபாரிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com