சாலையில் வழிந்தோடும் புதைசாக்கடை கழிவுநீரால் அவதியுறும் பொதுமக்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகச் சாலை  அருகே  வழிந்தோடும் புதை சாக்கடைத் திட்டக் கழிவுநீரால் தூர்நாற்றம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகச் சாலை  அருகே  வழிந்தோடும் புதை சாக்கடைத் திட்டக் கழிவுநீரால் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் தாங்கள் பெரும் அவதிக்குள்ளாகுவதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட அரணாரை, துறைமங்கலம் பகுதிகளில் உள்ள 21 வார்டுகளில், கடந்த 2012, மே 7 ஆம் தேதி புதை சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 3,200 ஆள் இறங்கும் தொட்டிகள் மற்றும் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டன.
இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதை சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், நகரின் பிரதான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆள் இறங்கும் தொட்டிகள் மீது கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி உடைந்து, அவை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
குறிப்பாக, விரிவாக்கப் பகுதிகளில் புதை சாக்கடை திட்டப் பணியின்போது தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூடாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் செல்லும் சாலையில் உள்ள புதை சாக்கடை கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி கடந்த சில நாள்களாக நிரம்பி, சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. கடும் துர்நாற்றத்துடன் சாலைகளில் வழிந்தோடும்  கழிவுநீரால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. 
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கூறியது: கடந்த சில நாள்களாக சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் குறித்து நகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தோம். இதுவரை, சீரமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களும், பாதசாரிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். கழிவுநீரை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com