அகவிலைப்படி உயர்வு கோரி பெரம்பலூர், அரியலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத அகவிலைப்படிக்கு இணையாக, நிகழாண்டு

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத அகவிலைப்படிக்கு இணையாக, நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. தயாளன் பேசியது:
கடந்த ஜன. 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு 3 சதவீத அகவிலைப்படியை  ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால், தமிழக அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதைப் போல, மாநில அரசு ஊழியர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலர் குமரி அனந்தன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பொன். ஆனந்தராசு,  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாரதிவளவன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அமைப்பாளர் சின்னசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டத்தில்...:  அரியலூர், ஜயங்கொண்டம்,  தா.பழூர், திருமானூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூரில் வட்டாரத் தலைவர் ஸ்ரீதர், திருமானூர் மற்றும் செந்துறையில் வட்டாரத் தலைவர் காமராஜ், ஜயங்கொண்டத்தில் சி.பி.காமராஜ், ஆண்டிமடத்தில் மாவட்டத் தலைவர் ஞானசேகர், தா.பழூரில் பஞ்சாபிகேசன் ஆகியோர் ஆர்பாட்டத்துக்கு தலைமை வகித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com