ரம்மியமாகக் காட்சியளிக்கும் கொன்றை மலர்கள்

பெரம்பலூர் நகரின் பல்வேறு இடங்களில் பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்கள் பொதுமக்களையும், இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.


பெரம்பலூர் நகரின் பல்வேறு இடங்களில் பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்கள் பொதுமக்களையும், இளைஞர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
கனிக்கொன்றை, சரக்கொன்றை என்று அழைக்கப்படும் கொன்றை மரங்கள் வறட்சியைத் தாங்கி வளருபவை. இம்மரங்களில் பங்குனி இறுதியில் அல்லது சித்திரையில் பூ பூக்கும். புத்தாண்டில் இப்பூக்களைப் பார்த்தால் ஆண்டு முழுவதும் வசந்தம் தங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. சில மரங்களில் இலைகளே தெரியாத அளவுக்கு மஞ்சள் நிறத்தில் அடர்ந்து காணப்படும் கொன்றை மலர்கள் ரம்மியமாகக் காட்சியளிக்கின்றன.
முருங்கைக் காய் வடிவத்தில் நீண்ட காய்கள் காய்த்து தொங்குவது பார்வையாளர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. கடந்த சில நாள்களாக ஆட்சியர் அலுவலக சாலையில் பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்களின் அருகே நின்று படம் எடுத்துக் கொள்வதில் இளைஞர்களும், பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெயர்க் காரணம்: பொதுவாக வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக காணப்படும் கொன்றை மரங்கள், சரம் சரமாக பூக்கும் தன்மையுடையதால், சரக் கொன்றை என அழைக்கப்படுகின்றன. அதிக சூரிய ஒளி, மழைநீர் தேங்காத பகுதியில் நன்கு வளரக்கூடிய இந்த மரம், கோடை காலத்தில் தொடங்கி வசந்தகாலம் வரையில் பூக்கும் தன்மை கொண்டது.  இலக்கியங்களில் சிறப்பு பெற்ற கொன்றை மலர்கள், சங்க காலத்தில் முல்லை நிலத்துக்குரிய பூவாகக் கருதப்பட்டது. மலையாள மக்களும் விஷேச நாள்களில் கொன்றை மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்வதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளனர்.
சிவபெருமானுக்கு உகந்ததுகொன்றை மலர்கள் சிவபெருமானுக்கு உகந்த மலர் என்பதால், பல கோயில்களில் இம்மரங்கள் தல விருட்சமாகவும் உள்ளன. இம்மரங்களின் பூ, இலை மற்றும் பட்டைகளுக்கு மருத்துவ குணம் உள்ளபடியால் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com