பெரம்பலூரில் குடிநீர் கோரி மறியல்

பெரம்பலூரில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் 

பெரம்பலூரில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம் 10-வது வார்டில் வசிக்கும் மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் 15 அல்லது 20 நாள்களுக்கு ஒரு முறையே நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படுவதாகத் தெரிகிறது. கிணறு மற்றும் உப்போடையிலிருந்து பொதுமக்களின் இதர தேவைகளுக்காக 3 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீர் மிகவும் பற்றாக்குறையாக விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரம்பலூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துறைமங்கலம் 3 சாலை சந்திப்புப் பகுதியில் காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த நகராட்சி ஆணையர் (பொ) ராதா, சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றார். ஆனால், பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு தொடர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையரும், போலீஸாரும் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 
இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com