பயோ மெட்ரிக் வருகை பதிவு: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 16th May 2019 08:26 AM | Last Updated : 16th May 2019 08:26 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் வருகை பதிவு செய்யப்பட உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு, பெரம்பலூர் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்புக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு. அருளரங்கன் தலைமை வகித்தார். வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜா முன்னிலை வகித்தார்.
கணினி பயிற்றுநர் மணிவண்ணன், பயோ மெட்ரிக் கருவியில் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் மற்றும் அவர்களின் வருகையை பதிவு செய்யும் முறை குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில் 98 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி பதிவாளர்கள், கணினி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.