வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 16th May 2019 08:26 AM | Last Updated : 16th May 2019 08:26 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் வழக்குரைஞரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்கள் பலரை, ஆளும் கட்சியைச் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர் வழக்குரைஞர் ப. அருள். இவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
போலீஸாரின் இச்செயலைக் கண்டித்தும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். செயலர் துரை, பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர்கள் மணிவண்ணன், புகழேந்தி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.