இரு பிரிவினரிடையே பிரச்னை: தேரோட்டத்துக்கு தடை

பெரம்பலூர் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே எழுந்த பிரச்னையை தொடர்ந்து, புதன்கிழமை நடைபெற

பெரம்பலூர் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே எழுந்த பிரச்னையை தொடர்ந்து, புதன்கிழமை நடைபெற இருந்த தேரோட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
         பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் அருகே நாரணமங்கலத்தில் உள்ள செல்லியம்மன் கோயில், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இதில், ஒரு பிரிவினரை பங்கேற்க திருவிழாக் குழுவினர் அழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, தேரோட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என, அதே கிராமத்தைச் சேர்ந்த வரதராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 
அண்மையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிகாரிகள் சமரசக் கூட்டம் நடத்தி, தீர்வு காணுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு பிரிவினருக்கான சமரசக் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன் தலைமையில், துணை கண்காணிப்பாளர் ரவீந்திரன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இரு பிரிவினரும் சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு அனுமதி மறுத்ததோடு, தேர் வரும்போது அவரவர் பகுதிகளில் பூஜைகள் செய்து கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பிரிவினர், நாரணமங்கலம் தேரடி வீதியில் அன்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாடாலூர் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.  
இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தைக்கு ஒரு தரப்பினர் வரவில்லை. இதனால், இருதரப்பினர் இல்லாமல் தேரோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியாது எனக் கூறி மாவட்ட வருவாய் அலுவலர் தேரோட்டத்துக்கு தடை விதித்தார்.
தடையை மீறி தேரோட்டம் நடத்த ஒரு தரப்பினர் முடிவு செய்தனர். இதனால் நாரணமங்கலம் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டது. பின்னர், ஊர் முக்கியஸ்தர்கள் கூடி பேசியதில் தேரோட்டம் நடத்தும் முடிவைக் கைவிட்டனர். பின்னர், ஒருதரப்பினர் மட்டும் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியை வைத்து பூஜை செய்துவிட்டு சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com