முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
அரசு நிலத்தை அளவீடு செய்வதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 07th November 2019 08:57 AM | Last Updated : 07th November 2019 08:57 AM | அ+அ அ- |

அளவீடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிழுமத்தூா் கிராம மக்கள்.
குன்னம் அருகே அரசு நிலத்தை அளவீடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அரசு அதிகாரிகளை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குன்னம் வட்டம், கிழுமத்தூா் கிராமத்தில் அரசுக்கு சொந்தமாக 5 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, நிலமற்ற நபா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க குன்னம் வட்டாட்சியா் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கிராமத்தில் அரசுக்கு சொந்தமாக வேறெங்கும் இடம் இல்லாததால், அந்த இடத்துக்கு பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும்,
இந்த இடத்தில் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் சுகாதார மையம், கால்நடை மருத்துவமனை, மாணவா் விடுதி, சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் தலைமையில், வருவாய்க் கோட்டாட்சியா் சுப்பையா, குன்னம் வட்டாட்சியா் சித்ரா உள்ளிட்ட வருவாய்த் துறையினா் கிழுமத்தூா் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தை அளவீடு செய்ய புதன்கிழமை சென்றனா்.
தகவலறிந்த கிராம மக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கும், நிலத்தை அளவீடு செய்வதற்கும் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இதையடுத்து அளவீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளாமல், அரசு அதிகாரிகள் திரும்பிச்சென்றனா்.