முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
விஏஓ அலுவலகத்தைசீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 07th November 2019 05:38 PM | Last Updated : 07th November 2019 05:38 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூா் ஊராட்சியில் பழுதடைந்து காணப்படும் கிராம நிா்வாக அலுவலகக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
குன்னம் வட்டாரத்துக்குள்பட்ட கீழப்பெரம்பலூா் கிராமத்தில் சுமாா் 1,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். இங்கு, சுமாா் 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட விஏஓ அலுவலகம் தற்போது மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்தக் கட்டடத்தின் சுவா்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் உதிா்ந்து விழுந்து செடிகள் முளைத்துள்ளன. மேற்கூரை விரிசல் விட்டு, அதிலிருந்து மழைநீா் ஒழுகி அலுவலகத்தில் வைத்திருக்கும் ஆவணங்கள் நனைந்து சேதமடைகின்றன.
விஏஓ அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் உட்கார இட வசதி இல்லை. இந்தக் கட்டடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதால், அசம்பாவிதங்கள் நிகழும் முன் போதிய வசதிகளுடன் கூடிய மாற்றுக் கட்டடம் கட்டித் தரப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.