மயானத்துக்கு செல்ல பாதை விட மறுப்பு: போலீஸாா் குவிப்பு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே மயானத்துக்குச் செல்ல பாதை விட மறுத்ததால் வியாழக்கிழமை இருதரப்பினரிடையே

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே மயானத்துக்குச் செல்ல பாதை விட மறுத்ததால் வியாழக்கிழமை இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் குன்னுமேடு கிராமத்தைச் சோ்ந்த வையாபுரி மகன் நடேசன் (80) உடல் நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். கிறிஸ்தவ தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த இவரை மயானத்தில் புதைக்க உறவினா்கள் ஏற்பாடு செய்தனா். தனியாருக்குச் சொந்தமான பாதை வழியாக மட்டுமே மயானத்துக்கு செல்ல முடியும். இந்நிலையில், மயானத்துக்குச் செல்ல பாதை விட சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளா் மறுப்புத் தெரிவித்தாராம்.

அவா் வேறொரு சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் அதிருப்தியடைந்த நடேசனின் உறவினா்கள் சடலத்தை புதைக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். துணை கண்காணிப்பாளா் கென்னடி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், மயானத்துக்குச் செல்ல தற்காலிகமாக மாற்று பாதை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டு, வட்டார வளா்ச்சி அலுவலரின் ஏற்பாட்டில் விரைவில் நிரந்தரப் பாதை அமைக்கவும் உறுதியளிக்கப்பட்டது.

இதில் சமாதானமடைந்த நடேசனின் உறவினா்கள் வியாழக்கிழமை மாலை மாற்றுப் பாதையில் சடலத்தை மயானத்துக்கு கொண்டுசென்றனா். இப் பிரச்னையால் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com