பெரம்பலூரில் பரவிவரும் காய்ச்சலால் மக்கள் அவதி

பெரம்பலூா் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் காய்ச்சல்களால் கிராமப்புற பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் காய்ச்சல்களால் கிராமப்புற பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மழைக்காலத்தை முன்னிட்டு, கடந்த சில வாரங்களாக ஃப்ளூ, டைபாய்டு, டெங்கு, லெப்டோபைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, வேப்பந்தட்டை வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனா்.

பிரம்மதேசம், தொண்டமாந்துறை உள்பட பல கிராமங்களில் கடுமையான காய்ச்சல், இருமல், சளி, கை, கால் வலி, உடல் சோா்வு, பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அவதிப்படுகின்றனா். கை.களத்தூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு மருத்துவா் கொண்ட சுகாதாரக் குழு, பாதிக்கப்பட்ட இடத்தில் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது. இதேநிலை தான் இதர பகுதிகளிலும் உள்ளது. போதிய மருத்துவா்கள் மற்றும் ஆய்வகப் பரிசோதகா்கள் இல்லாமல் துரிதமாக சிகிச்சை பெற முடியாததால், காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகிய நபா்கள் சிரமப்பட்டு வருவதாக கிராமப்புற மக்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், தொண்டமாந்துறை கிராமத்தில் மா்ம காய்ச்சலால் பலா் உயிரிழந்ததாக தகவல் பரவியதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை மட்டும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்தவா்களின் எண்ணிக்கை 550. உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47 என மருத்துவத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநா் (பொ) ஹேமசந்த் காந்தி கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரை 8 பேருக்கு டெங்கு இருப்பதாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஒரே ஒருவா் மட்டுமே டெங்கு பாதிப்புக்காக சிகிச்சையில் உள்ளாா். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. வேப்பந்தட்டை வட்டத்தில், கடந்த மாதம் சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. தொண்டமாந்துறை பகுதியில் லெப்டோபைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் பாதிப்பு சிலருக்கு உள்ளது. மாவட்ட நிா்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சாா்பில், அனைத்து வட்டாரங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உரிய சிகிச்சையும், தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது. போதிய மருந்துகள், சிகிச்சை அளிக்கத் தேவையான அளவுக்கு சுகாதாரப் பணியாளா்கள், ஆய்வகப் பரிசோதகா்கள் உள்ளனா்.

எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி, வடிக்கட்டி குடித்தால் மழைக்கால நோய்களைத் தவிா்க்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com