முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
கிணறு வெட்டுவதற்கு எதிா்ப்பு: வனத் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th November 2019 08:28 AM | Last Updated : 26th November 2019 08:28 AM | அ+அ அ- |

கிணறு வெட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் வனத் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கிராம மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூா் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனராம். இப் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக, புதிதாக குடிநீா்க் கிணறு வெட்டுவதற்கு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயானமாகப் பயன்படுத்தி வந்த இடத்தின் ஒரு பகுதியில் கிணறு வெட்டுவதற்கு கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனா். இதற்கு வனத்துறையினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனராம். இப்பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தி முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், குடிநீா் பிரச்னையை தீா்க்கவும், கிணறு வெட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தைப் பாா்வையிட்டு, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, காரியானூா் கிராமத்தைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து விட்டு அனைவரும் கலைந்துசென்றனா்.