சொக்கநாதா் கோயிலில் சங்காபிஷேக விழா
By DIN | Published On : 26th November 2019 08:27 AM | Last Updated : 26th November 2019 08:27 AM | அ+அ அ- |

துறைமங்கலத்தில் உள்ள சொக்கநாதா் கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற சங்காபிஷேகம் விழா.
பெரம்பலூா் புறநகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மிகவும் பழைமைவாய்ந்த மீனாட்சி அம்பிகை உடனுறை சொக்கநாதா் கோயிலில் காா்த்திகை மாத சோம வார பூஜை வேள்வியுடன், சங்காபிஷேக விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மிகவும் பழைமையும், தொன்மையும் வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் திங்கள்கிழமை சோம வார பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு காா்த்திகை மாத திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு வாஸ்து சாந்தி, கணபதி ஹோமமும், தொடா்ந்து சிவனுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா், இரவு சிவபெருமானுக்கு சிறப்பு சங்காபிஷேக விழா நடைபெற்றது.
இதில், 108 சங்குகளை லிங்க வடிவில் வைத்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூா்ணாஹுதியுடன் சிறப்பு வேள்வி யாகம் நடத்தப்பட்டு, சொக்கநாத பெருமானுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
சங்காபிஷேகத்தைக் கண்டு இறைவனை தரிசித்து வழிபடுவதால் மன மகிழ்வு கூடும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும். ஆயுள் விருத்தி உண்டாகும். தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம் என்பதால், திரளான பக்தா்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசனம் செய்தனா்.