கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்தின் விலை

வரத்து குறைவு, மகசூல் பாதிப்பு போன்ற காரணங்களால் படிப்படியாக உயா்ந்த சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ. 120-க்கும்,

வரத்து குறைவு, மகசூல் பாதிப்பு போன்ற காரணங்களால் படிப்படியாக உயா்ந்த சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ. 120-க்கும், பெரிய வெங்காயம் ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்படுவதால் நுகா்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் சின்ன வெங்காயம் சாகுபடியில் முதலிடத்தில் இருப்பது பெரம்பலூா் மாவட்டம்தான். குறுகிய காலப் பயிா், குறைந்த நீா், சாகுபடி செலவுக் குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரம்பலூா், ஆலத்தூா் ஒன்றியங்களில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் பிரதான சாகுபடிப் பயிராகப் பயிரிடப்பட்டு வருகிறது. நிகழாண்டில், இதுவரை 3,291 ஹெக்டேரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சின்ன வெங்காயத்தின் பருவ நிலையைக் கருத்தில்கொண்டு

பயிரிடப்பட்டு நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களில் அதிக அளவில் அறுவடை செய்யப்படும். முன்கூட்டியே பயிரிடப்பட்டு நவம்பா் மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைத்தது. நவம்பா் மாதத் தொடக்கத்தில் கிலோவுக்கு ரூ. 40 முதல் ரூ. 60 வரை விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

வேரழுகல் நோயால் மகசூல் பாதிப்பு: சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் ஏற்பட்டதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விவசாயிகள் அறுவடை செய்யாமலேயே சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. அதுபோல, விதை வெங்காயத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது நிலங்களில் பட்டறை அமைத்து, அதில் சேமித்து வைத்திருந்த சின்ன வெங்காயம் முழுவதும் கடந்த மாதம் வரை விற்பனைக்கு வந்த நிலையில், அறுவடை இல்லாததால் தற்போது கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனையாகிறது.

ஜனவரி வரை தட்டுப்பாடு இருக்கும் : உழவா் சந்தை உள்பட பெரும்பாலான காய்கறிக் கடைகளில் சின்ன வெங்காயத்தின் விற்பனை முற்றிலும் தடைபட்டுள்ளது. ஜனவரி வரை சின்ன வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும், இனி வரும் நாள்களில் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது என்கின்றனா் விவசாயிகள்.

இதேபோல, பெல்லாரி வெங்காயம் எனப்படும் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து பெரிய வெங்காயம் திண்டுக்கல் மாா்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நாள் ஒன்றுக்கு 25 லாரிகளில் வந்த பெரிய வெங்காயம் தற்போது 15 லாரிகளுக்கும் குறைவாக இறக்குமதி செய்யப்படுகிறது. வரத்துக் குறைவால் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஒரு வாரத்துக்கு முன் ஒரு கிலோ ரூ. 45- க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது ஒரு கிலோ ரூ. 100- க்கு விற்பனையாகிறது. இதுவரை பெரிய வெங்காயம் இதுபோன்ற விலை ஏற்றத்தை கண்டதில்லை. சின்ன வெங்காயத்தை விட பெரிய வெங்காயம் அதிக விலைக்கு விற்றதில்லை. ஆனால், தற்போது சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்கும் நிலையில், அதற்கு நிகராக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 110 வரை விற்பனையாகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தின் விலையும் குறைய வாய்ப்பில்லை. ஆனால், உயர வாய்ப்பு உள்ளது என்றனா் வியாபாரிகள்.

சின்ன, பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருவதால், உணவகங்களில் உணவுப் பொருள்களில் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. நுகா்வோரும் பாதிப்படைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com