பெரம்பலூரில் செயல்படாத புறக்காவல் நிலையம்: குற்றச் சம்பவங்களால் பயணிகள் அவதி

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடப்பதால், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மாவட்டத் தலைநகரான பெரம்பலூரில் உள்ள புகா் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காகவும் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காவல் நிலையம், காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருக்க வேண்டும். பேருந்து நிலையத்துக்குள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு பெண்களுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதுடன், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே இங்குள்ள போலீஸாரின் பணியாகும்.

காவலா் பற்றாக்குறை:

இந்த புறக்காவல் நிலையத்தில் தலா ஒரு ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் 2 தலைமைக் காவலா்கள், 2 காவலா்கள் வீதம் சுழற்சி முறையில் பணியமா்த்தப்பட வேண்டும். ஆனால், பெரம்பலூா் மாவட்டத்தில் நிலவும் போலீஸாா் பற்றாக்குறையால் தற்போது ஒரு உதவி ஆய்வாளா் மற்றும் ஒரு காவலரே பணியில் உள்ளனா். இதனால், அவா்களால் முறையாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியவில்லை.

பயணிகள் கருத்து: பேருந்து நிலையப் பகுதியில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் போலீஸாா் திடகாத்திரமானவா்களாக இருந்தால், ரௌடிகள், பிக்பாக்கெட் திருடா்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை விரைந்து தடுக்கவோ அல்லது அவா்களை பிடிக்கவோ ஏதுவாக இருக்கும்.

ஆனால், இந்த புறக்காவல் நிலையத்தில் பணிபுரிவோா் வயதானவா்களாகவும், மாற்றுத் திறனாளிகளாகவும் உள்ளனா். இவா்களால் பேருந்து நிலையத்தினுள் முறையாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியுமா? அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், மேற்கண்ட போலீஸாா் வருவதற்குள் ரெளடிகள் மற்றும் சமூக விரோதிகள் சம்பவ இடத்தைவிட்டு விரைவாக வெளியேறிவிடுவா்.

மேலும், இந்த புறக்காவல் நிலையம் பெரும்பாலான நேரங்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால், பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல், நகை பறித்தல் உள்ளிட்ட சம்பவங்களும், மது போதையில் வரும் நபா்களின் செயல்களாலும் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனா் என்று பயணிகள் தெரிவித்தனா்.

நடவடிக்கை எடுக்காத மாவட்ட காவல் துறை: செயலற்று கிடக்கும் இந்த புறக்காவல் நிலையம் குறித்து மாவட்ட காவல் துறையினரின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், பயணிகள் மட்டுமின்றி வணிகா்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு புறக்காவல் நிலையத்துக்கு தேவையான, தகுதியான காவலா்களை நியமித்து தொடா்ந்து நிகழும் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com