முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு போட்டியில் 740 போ் பங்கேற்பு
By DIN | Published On : 24th October 2019 06:07 AM | Last Updated : 24th October 2019 06:07 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 740 போ் பங்கேற்றனா்.
பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது. இப் போட்டிகளில் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் தடகளம், நீச்சல், கையுந்து பந்து (வாலிபால்) மற்றும் கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் 100 மீ, 400 மீ, 1,500 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், வாலிபால் மற்றும் கபடிப் போட்டிகளும், 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ ப்ரீ ஸ்டைல், 50 மீ பேக் ஸ்ட்ரோக், 50 மீ ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீ பட்டா் பிளை ஸ்ட்ரோக், 200மீ இன்டிவி ஜுவல் மிட்லே ஆகிய போட்டிகள் அனைத்து பிரிவினருக்கும் நடத்தப்பட்டது. இதில், கபடி போட்டியில் 28 அணிகளும், வாலிபால் போட்டியில் 19 அணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என 740 போ் பங்கேற்றனா்.
போட்டிகளை, மாவட்ட மகளிா் விளையாட்டு விடுதி மேலாளா் ஜெயக்குமாரி முன்னிலையில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பாபு தொடக்கி வைத்தாா். தடகளப் பயிற்றுநா் கோகிலா, டேக்வாண்டோ பயிற்சியாளா் தா்மராஜன், மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் வாசுதேவன், அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் அன்பரசு, செந்தில்குமாா், செந்தமிழ்ச்செல்வன், கெப்சிபா மேரி ஆகியோா் போட்டிகளை நடத்தினா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற குழுவினா், தனி நபா்கள் ஆகியோருக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.