"இளைஞர்கள் அச்சம் தவிர்த்தவர்களாக வாழ்வதையே சமூகம் விரும்புகிறது'

இளைஞர்கள் அச்சம் தவிர்த்தவர்களாகவும், ரெளத்திரம் பழகுபவர்களாகவும் வாழ்வதையே சமூகம் விரும்புகிறது

இளைஞர்கள் அச்சம் தவிர்த்தவர்களாகவும், ரெளத்திரம் பழகுபவர்களாகவும் வாழ்வதையே சமூகம் விரும்புகிறது என்றார் அஸ்தினாபுரம் மாதிரிப் பள்ளி ஆசிரியர் வெ. ராமகிருஷ்ணன்.
பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சரங்கில் சிறப்பு விருந்தினராகப் 
பங்கேற்ற அவர் மேலும் பேசியது: 
அநீதியைக் கண்டு பொங்கி எழ நாம் பயில வேண்டும். வீரனுக்கு ஒருநாள் மரணம். கோழைக்கோ தினம் தினம் மரணம். வீரம் என்பது உள்ள உறுதியைப் பொறுத்தது. 
காந்தியடிகள்,  அம்பேத்கரிடம் இருந்த வீரம் மன உறுதி படைத்த வீரமாகும். மனதில் வீரத்துடனும், வாழ்வில் நேர்மையுடனும், கண் முன் நிகழும் அநியாயங்களைக் கண்டு பொங்கி எழ பழகும் மனப்பக்குவத்துடனும் நாம் வாழ வேண்டும். இளைஞர்கள் அச்சம் தவிர்த்தவர்களாகவும், ரெளத்திரம் பழகுபவர்களாகவும் வாழ வேண்டும் என்பதையே சமூகம் 
பெரிதும் விரும்புகிறது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து  அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன் பேசியது: 
இளையத் தலைமுறையினர் அச்ச உணர்வோடு கடமையாற்றும் நிலையே இன்று நிலவுகிறது. 
உணவு ஊட்டுவதற்காக சிறுவயதிலிருந்தே குழந்தைகள் அச்ச உணர்வுடன் தான் வளர்க்கப்படுகின்றனர். 
நாட்டுப்புற விளையாட்டுகள் அச்சமின்மையை வலுப்படுத்தின. அஞ்ச வேண்டியதிற்கு அஞ்சித்தான் ஆக வேண்டும் என்றார் அவர்.
சமூக ஆர்வலர் வெ. அபிராமி முன்னிலையில் நடைபெற்ற இப் பேச்சரங்கில், நல்லாசிரியர் விருதுபெற்ற இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி, தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு. முத்துமாறன், கவிஞர்கள் பா. பிரபாத்கலாம், வே. செந்தில்குமரன், ஆசிரியர்கள் த. மாயக்கிருஷ்ணன், அ. சுரேஷ்குமார், ராமானுஜம், பழனிச்சாமி, இயற்கை ஆர்வலர் விஜய்கார்த்திக் ஆகியோர் அச்சம் தவிர்- ரெளத்திரம் 
பழகு ஆகிய தலைப்புகளில் பேசினர். 
அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதுகலை மாணவி சந்திரலேகா வரவேற்றார். தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ப. செந்தில்நாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com