விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  

பெரம்பலூர் மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் நெல், சிறு தானியங்கள், பயறுவகை பயிர்கள், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பயிர்களில், கருநிலை விதைகள் மற்றும் ஆதார நிலை விதைகளை அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம். விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் விதைத்த பிறகு விதை வாங்கியதற்கான ரசீது மற்றும் சான்று அட்டையை இணைத்து, வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாக விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
மத்திய அரசால் அறிக்கை செய்யப்பட்ட பயிர் ரகங்களில் மட்டுமே சான்று விதை உற்பத்தி செய்ய இயலும். எந்தப் பயிர் ரகத்தில் விதை உற்பத்தி செய்யப்பட உள்ளதோ, அந்த நிலத்தில் பயிரின் வேறு ரகங்கள் முன் பயிராக சாகுபடி செய்யப்பட்டிருந்தால் தண்ணீர் பாய்ச்சி, செடிகள் வளர்ந்த பின் உழவு செய்து அவற்றை அழித்த பின் விதைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். 
வேளாண்துறை பரிந்துரை செய்துள்ள அளவு விதைகளை விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும். பயிர் வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு, வேளாண்மை துறை பரிந்துரைப்படி செய்ய வேண்டும். ஒவ்வொரு விதைப்பு அறிக்கைக்கும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும், ரகத்துக்கும், விதை நிலைக்கும் தனித்தனி விதைப்பறிக்கை அளிக்கப்பட வேண்டும். ஒரு விதைப்பறிக்கையில் அதிகபட்சம் 25 ஏக்கர் வரை பதிவு செய்யலாம்.
விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி மேற்கொண்டால், விதை உற்பத்திக்கு அரசு நிர்ணயிக்கப்படும் கொள்முதல் விலையும், விதை உற்பத்தி மானியமும் கூடுதலாக கிடைக்கும். இதனால் விதைப்பண்ணை சாகுபடி செய்யும் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற முடியும். எனவே, விதைப்பண்ணை அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com