வீட்டை விட்டு விரட்டியோர் மீது நடவடிக்கை கோரி தம்பதி போராட்டம்

வீட்டை விட்டு விரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோரிக்கை அட்டையை கைகளில் ஏந்தியவாறு கணவன், மனைவி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடு

வீட்டை விட்டு விரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோரிக்கை அட்டையை கைகளில் ஏந்தியவாறு கணவன், மனைவி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் லைலா (25). இவரது கணவர் அபுதாஹிர். லைலா தனது மாமனார் குத்புதீன் குடும்பத்தினருடன் லப்பைக்குடிகாட்டில் வசித்து வருகிறாராம். 
இந்நிலையில், மாமனார் மற்றும் நாத்தனார்கள் தாஹிரா பானு, ஜீனத் யாஸ்மின் ஆகியோர் தங்களை துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, வரதட்சிணை கேட்டு துன்புறுத்துகின்றனராம். 
இது தொடர்பாக மங்கலமேடு காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த லைலா- அபுதாஹிர் ஆகியோர், தங்களை வீட்டைவிட்டு வெளியேற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் அனுப்பினர். கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த தம்பதியினர், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தவறினால் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
நூதனப் போராட்டம்: இந்திய தொழிலாளர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகத்தில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னம் வட்டம், கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நலனை கருதி மாலை நேரம் இயக்கப்படும் பேருந்தின் நேரத்தை மாற்றக்கோரி பலமுறை மனுக்கள் அளித்தும், போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதேபோல, கீழப்புலியூர் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு தனிப்பட்டா வழங்க கோரியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், போராட்டத்துக்கான செலவுத் தொகையை குன்னம் வட்டாட்சியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, கீழப்புலியூர் ஆதிதிராவிடர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தனித் தனி காசோலையாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, கருப்புத் துணிகளால் கை, வாயை கட்டிக்கொண்டு, ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com