சின்ன வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் சின்ன வெங்காயத்தில்

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் சின்ன வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்னும் தலைப்பில் ஒரு நாள் இலவச பயற்சி புதன்கிழமை நடைபெற்றது.  
இப்பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்த வேளாண் அறிவியல் மையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன் கூறியது:
ரசாயனப் பூச்சிக் கொல்லியைக் குறைத்து, இயற்கை இடுபொருள்களான வேப்பங்கொட்டை சாறு கரைசல், பஞ்சகாவ்யா போன்றவற்றை பயன்படுத்தலாம். பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களிலிருந்து வெங்காயப் பயிரைக் காப்பாற்ற, உயிரிக் கட்டுப்பாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தலாம். 
வெங்காயத்தில் காய் அழுகல் நோய் வராமல் தடுக்க டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.  
வெட்டுப்புழுவைக் கட்டுப்படுத்த என்.பி.வி மற்றும் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் போன்ற உயிரிப் பொருள்களையும், வெண் புழுவைக் கட்டுப்படுத்த மெட்டாரைசியம் எனும் உயிரிக் கட்டுப்பாட்டுப் பொருளை நிலத்திலிட வேண்டும். இலைப்பேனைக் கட்டுப்படுத்த பிவேரியா பேசியானா என்னும் உயிரிப் பொருளைப் பயன்படுத்தலாம். இந்த உயிரிக் கட்டுப்பாட்டுப் பொருள்கள் குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் மிகுந்த செயல்திறன் பெற்றவையாக இருக்கும்.  
எனவே, வரும் புரட்டாசிப் பட்ட வெங்காய சாகுபடியில் விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களை கடைபிடித்து, ரசாயனப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்றார் அவர். 
தொடர்ந்து, சின்ன வெங்காயத்தில் விதைநேர்த்தி செய்தல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை, உர நீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகள், விதை மூலம் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தல் உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. 
பயிற்சியில், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com