அய்யனார்பாளையத்தில் பருத்தியில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அய்யனார்பாளையம் கிராமத்தில் ஹேன்ஸ் ரோவர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அய்யனார்பாளையம் கிராமத்தில் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையம் சார்பில், ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி மாரியப்பன் தலைமை வகித்தார்.  
விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதாவதி பேசியது: 
நீண்ட இழைப் பருத்தி ரகங்கள், ஒரு ஹெக்டேருக்கு சுமார் 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 2 கிலோ பாஸ்போ பாக்டீரியத்தை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து, விதைப்பதற்கு முன் சால்களின் மேல் சீராகத் தூவ வேண்டும். பிறகு, ஹெக்டேருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட உரத்தை சுமார் 40 கிலோ மணலுடன் கலந்து விதை சால்களில் தூவ வேண்டும்.  
மண் பரிசோதனை பரிந்துரையின்படி உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்ய இயலாதபோது பொதுப் பரிந்துரையாக ரகங்களுக்கு ஹெக்டேருக்கு 80 கிலோ தழைச்சத்து, யூரியா 175 கிலோ, 40 கிலோ மணிச்சத்து, சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ, பொட்டாஷ் 65 கிலோ இட வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஹெக்டேருக்கு 120 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.  
யூரியா 260 கிலோ இடுவதன் மூலம் 120 கிலோ தழைச்சத்து கிடைக்கும். மணிச்சத்து 60 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 375 கிலோ இடுவதன் மூலம் 60 கிலோ மணிச்சத்து கிடைக்கும். சாம்பல் சத்து 60 கிலோ, அதாவது பொட்டாஷ் 100 கிலோ உரமிட்டால் 60 கிலோ சாம்பல் சத்து கிடைக்கும்.  
இந்த உரங்களை அடியுரமாக பாதி அளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் பாதியளவு சாம்பல் சத்துகளை இட வேண்டும். மீதமுள்ள தழை மற்றும் சாம்பல் சத்துகளை இரண்டு முறை சப்பை பிடிக்கும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் இட வேண்டும். 
உரங்களை சரிவர இடாவிட்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சீரியமுறையில் பருத்திக்கான உரங்களை இடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என்றார் அவர்.  
பயிற்சியில் அய்யனார்பாளையம் கிராம விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com