சொட்டுநீா்ப் பாசனக்குழி அமைக்க மானியம்:விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 07th August 2020 09:30 AM | Last Updated : 07th August 2020 09:30 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் சொட்டுநீா்ப் பாசனக் குழி அமைக்க, ரூ. 3 ஆயிரம் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் வே.சாந்தா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் மூலம் நிகழாண்டுக்கு சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க 4,350 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ. 30.48 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு, குழி எடுத்தலுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. பயன்பெற பதிவு செய்யும்போது, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலை விவசாயிகள் சமா்ப்பிக்க வேண்டும்.
பணியானை வழங்கப்பட்ட பின்னா், ஒன்றே கால் அடி முதல் 2 அடி அகலம் வரையிலும், 2 அடி ஆழத்துக்கு குறையாதவாறும் விவசாயிகள் சொந்த செலவில் குழி எடுக்க வேண்டும்.
பிறகு, வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வயல் ஆய்வு மேற்கொண்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்னா், அதற்கான பட்டியல்களைச் சமா்ப்பித்து மானியம்பெறலாம்.