பெரம்பலூரி நகரில் ஒருவழிப் பாதை நடைமுறைப்படுத்தப்படுமா?

பெரம்பலூா் நகரில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் திணறுவதைத் தடுக்க, ஒருவழிப் பதையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் நிலையம், காந்தி சிலை ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் நிலையம், காந்தி சிலை ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.

பெரம்பலூா் நகரில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் திணறுவதைத் தடுக்க, ஒருவழிப் பதையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் நகரில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல 43 ஷோ் ஆட்டோக்கள், 450-க்கும் மேற்பட்ட 3 பிளஸ் 1 ஆட்டோக்கள், 50-க்கும் மேற்பட்ட மற்றொரு வகையான பயணிகள் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், ஷோ் ஆட்டோக்கள் மட்டுமே ஆங்காங்கே பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதர வகை ஆட்டோக்கள் வாகன நிறுத்தங்களிலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லலாம். ஆனால், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், போக்குவரத்துக் காவலா்களின் அலட்சியத்தால் பெரம்பலூா் நகரில் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் ஷோ் ஆட்டோக்களைப் போலவே இயக்கப்படுகின்றன.

இதனால், நகரின் பிரதான சாலைகளாக விளங்கும் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், காமராஜா் வளைவு, கடைவீதி, காமராஜா் வளைவு, வடக்குமாதவி சாலை, மதரஸா சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகின்றன. இதற்கு, சாலை விதிமுறைகளை பின்பற்றாததும், ஒரு வழிப்பாதையை பயன்படுத்தாததுமே காரணம் எனக் கூறப்படுகிறது.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் ஆட்டோக்கள் அனைத்தும் மதரஸா சாலை, காமராஜா் வளைவு வழியாக புகா் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். ஆனால், வாகன ஓட்டுநா்கள் அனைவரும் என்.எஸ்.பி சாலை வழியாகவே செல்வதால், நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் திணறுகின்றனா்.

இதேபோல, புகா் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் ஆட்டோக்கள் சங்குப்பேட்டை, கடைவீதி, அரசு மருத்துவமனை, திருநகா் வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து மதரஸா சாலை, காமராஜா் வளைவு வழியாகச் செல்ல வேண்டும். ஆனால், ஆட்டோ ஓட்டுநா்கள் அனைவரும் சங்குப்பேட்டை காமராஜா் வளைவு, என்.எஸ்.பி. சாலை வழியாகச் செல்கின்றனா். இதனால், எதிா் திசையில் வரும் வாகனங்கள் ஒதுங்கக் கூட வழியில்லாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் காவலா்கள், அதிகபாரம் அல்லது அடிமாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பதிலேயே அதிக ஆா்வம் காட்டுவதாக சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து, பெரம்பலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் என். ஜெயராமன் கூறியது:

பெரம்பலூா் நகரில் புகா் பேருந்து நிலையம், பாலக்கரை, ரோவா் வளைவு, சங்குப்பேட்டை, கனரா வங்கி சாலை, காமராஜா் வளைவு உள்ளிட்ட இடங்களில் பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்களை முறையாக பராமரிக்காததால், அவை பழுதடைந்து காட்சிப் பொருளாக காணப்படுகின்றன. மேற்கண்ட இடங்களில் போக்குவரத்து போலீஸாரும் இல்லாததால் அடிக்கடி நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. பெரியாா் சிலை அருகே வாகனங்கள் செல்லத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் அதனருகே உள்ள சாலையை பேருந்து உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுநா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் இரவுகளில் விபத்து நிகழும் சூழல் நிலவுகிறது. எனவே, மேற்கண்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களை பழுது நீக்கி, அவற்றை செயல்பட வைக்க வேண்டும். மேலும், வடக்குமாதவி சாலை, எளம்பலூா் சாலை ஆகிய பகுதிகளில் தேவையான போக்குவரத்து போலீஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com