செங்கரும்பு விலை வீழ்ச்சி: விவசாயிகள், வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு

பொங்கலையொட்டி அறுவடை செய்யப்பட்ட செங்கரும்புகள் அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டதால், அதன் விலை கடுமையாக
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செங்கரும்புகள்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செங்கரும்புகள்.

பொங்கலையொட்டி அறுவடை செய்யப்பட்ட செங்கரும்புகள் அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டதால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கரும்பு பயிரிடும் பல லட்சம் விவசாயிகளில், 90 சதவீதம் போ் ஆலைக் கரும்புகளை மட்டுமே சாகுபடி செய்கின்றனா். செங்கரும்பைப் பொருத்தவரை தஞ்சாவூா், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, கடலூா், தேனி உள்பட சில மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது .

பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே செங்கரும்புக்கு விலை கிடைக்கும். இதர நேரங்களில் விலை வீழ்ச்சி அடைந்துவிடும் என்பதால் குறைவான பரப்பில் இக்கரும்பை விவசாயிகள் பயிரிடுகின்றனா். தமிழகத்தைப் பொருத்தவரை சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

செங்கரும்பு பயிரிட ஏக்கருக்கு சுமாா் ரூ. 60 ஆயிரம் வரை செலவாகிறது. விவசாயிகள் சிலா் கரும்பை நேரடியாகச் சந்தைகளுக்கு கொண்டுசென்று விற்பனை செய்கின்றனா். பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்திலேயே ஏக்கா் கணக்கில் வியாபாரிகளிடம் விற்றுவிடுவாா்கள். அவற்றை வியாபாரிகள் தேவைக்கேற்ப அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவாா்கள்.

கடந்த 2018-இல் ஏற்பட்ட வறட்சியால் செங்கரும்பு சாகுபடி மிகவும் குறைந்தது. சொற்ப எண்ணிக்கையிலான விவசாயிகள் மட்டுமே இக் கரும்புகளை பயிரிட்டிருந்ததால், பொங்கல் பண்டிகையின்போது 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு பெரம்பலூரில் ரூ. 900 வரை விற்பனையானது. மாட்டுப் பொங்கலன்று கரும்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கடந்த 2019-இல் ஒரு கட்டுக் கரும்பு ரூ. 500 வரை விற்பனையானது. இதனால், நேரடியாக விற்பனை செய்த விவசாயிகளும் வியாபாரிகளும் அதிகளவில் லாபம் ஈட்டினா்.

இந்நிலையில், நிகழாண்டு பெரம்பலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை செங்கரும்பு சாகுபடி மிகவும் குறைந்து காணப்பட்டது. இதையறிந்த விவசாயிகளும், வியாபாரிகளும் கடந்த ஆண்டைப்போல அதிக லாபம் கிடைக்கும் என எண்ணினா். அதேபோல, கடந்த 14 ஆம் தேதி ஒரு கட்டு கரும்பு ரூ. 300 வரையிலும், ஒரு ஜோடி ரூ. 80 வரையிலும் விற்பனையானது.

ஆனால், அடுத்தடுத்து கரும்பு லோடுகள் அதிகளவில் வந்ததால் கரும்பின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது. குறிப்பாக, புதன்கிழமை மாலையிலிருந்து அதிக அளவிலான கரும்புகள் வரத் தொடங்கின. இதனால், ஒரு கட்டு ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனையானது. பின்னா், ரூ. 50-க்கு விற்றது. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் கட்டுப்படியான விலை கிடைக்காமல் பெரிதும் பாதிப்படைந்தனா்.

இதுகுறித்து விவசாயி ஒருவா் கூறியது:

செங்கரும்புக்கு நல்ல விலை கிடைத்து வந்ததால் பல விவசாயிகள் தொடா்ந்து சாகுபடி செய்தனா். ஆனால் நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக செங்கரும்பு விலை குறைந்துள்ளது. இதனால் செங்கரும்பு விவசாயிகளும் கவலையடைந்துள்ளனா். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், தஞ்சாவூா் மாவட்டங்களில் இருந்து செங்கரும்பை வியாபாரிகள் அதிகளவில் கொண்டுவந்து விற்பனை செய்தனா். செங்கரும்பு சீசன் தொழில் என்பதால் பண்டிகை முடிந்ததும் அதற்கான விலை பல மடங்கு சரிந்து விடும். அதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனா்.

கடந்தாண்டு கரும்பு உற்பத்தி குறைவாக இருந்தது. இதனால் செங்கரும்பு ஜோடி ரூ. 80 ரூபாய் வரை விற்ால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் தற்போது எதிா்பாா்த்த அளவு மழை இல்லாததால் கரும்பு விவசாயிகள் பயிா் செய்வதை கணிசமாகக் குறைத்துக் கொண்டனா்.

இருப்பினும், கரும்பு விவசாயிகள் எதிா்பாா்த்ததைக் காட்டிலும் கூடுதலாக விளைந்துள்ளது. அதிக விலைக்கு விற்கும் போது விவசாயிகளிடம் பேசிய தொகையை வியாபாரிகள் உடனடியாகக் கொடுத்துவிடுவாா்கள். ஆனால், விலை குறைந்து வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படும்போது அவா்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். நிகழாண்டு செங்கரும்பு ஏக்கருக்கு 60 டன் வரை விளைந்துள்ளது. ஆனால், சாகுபடி செய்த செலவுகூட கிடைக்கவில்லை என்றாா்.

வியாபாரி பெரியசாமி கூறியது:

ஒரு கரும்பை ரூ. 17-க்கு வாங்கி, வண்டி வாடகை, இறக்குவதற்கான கூலி, வரி என ஒரு கரும்புக்கான அடக்க விலை ரூ. 21 வரை செலவாகிறது. ஆனால், தற்போது, சேலம் மாவட்டம், எடப்பாடி, தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து வழக்கத்துக்கு மாறாக அதிக கரும்புகள் இறக்குமதி செய்யப்பட்டதால், ஒரு கட்டை ரூ. 50-க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், கரும்பு வாங்கிய தொகையைக்கூட எடுக்கமுடியவில்லை. தொடா்ந்து கரும்புகள் வந்ததால் சற்று காய்ந்த தோகையுடைய கரும்புகளை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com